Monday, July 25, 2016

பயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265

பல்லவி 
பயந்து கர்த்தரின் பாதை யதனில் 
பணிந்து நடப்போன்  பாக்கியவான் 
அனு பல்லவி  
முயன்று உழைத்தே  பலனை உண்பான் 
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் 
சரணங்கள் 
உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
 தண்ணிழல் திராட்சைக்  கொடி போல் வளரும் 
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் 
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் 

ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே 
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே 
மெலிவிலா நல்ல பாலருன்  பாலே 
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே 

கர்த்தரின் வீட்டை கட்டாவிடில் அதைக் 
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை 
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் 
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை 

Wednesday, April 1, 2015

சிலுவை சுமந்த என் இயேசு

சிலுவை சுமந்த என் இயேசு
சிந்தின இரத்தம் புரண்டோடியே
 நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை காணாய்
நிலையான சந்தோஷம் பூவினில்
 கர்த்தாவின் அன்பண்டையில் வா

ஆத்தும  மீட்பை பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே

பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார்

நித்ய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய்

தாகமடைந்தோர்  எல்லாருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார்

கிறிஸ்தவ

Thursday, September 13, 2012

ஐயனே ! உமது திருவடி களுக்கே

1.ஐயனே ! உமது திருவடி களுக்கே
 ஆயிரந்தரந் தோத்திரம் !
 மெய்யனே ! உமது தயைகளை அடியேன்
 விவரிக்க எம்மாத்திரம்?

2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
    சேர்ந்தர வணைத்தீரே:
    அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
    யாகவா  தரிப்பீரே .

3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
   ஏழையைக் குணமாக்கும்
   கருணையாய்  என்னை உமதகமாக்கிக்
   கன்மமெல்லாம் போக்கும்.

4. நாவிழி செவியை நாதனே, இந்த
   நாளெல்லாம்  நீர் காரும்.
  தீவினை விலகி நான் திருமுகம் நோக்க
  தெய்வமே , அருள் கூரும் .

5.கைகாலால் நான் பவம் புரியாமல்
  சுத்தனே துணை நில்லும்
  துய்யனே , உம்மால் தான் எனதிதயம்
  தூய் வழியே செல்லும்.

6. ஊழியந் தனை நான் உண்மையாய்ச் செய்ய
   உதவி நீர் செய்வீரே .
   ஏழை நான் உமக்கே இசையானால் ஆவி
  இன்பமாய்ப் பெய்வீரே.

7.  அத்தனே ! உமது மகிமையை நோக்க 
    அயலான் நலம் பார்க்கச் 
    சித்தமாய் அருளும், மெய் விசுவாசம் 
    தேவனே உமக் கேற்க.
 
8. இன்றும்  என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ 
    டேயடியேன்  நடத்தப் 
    பொன்றிடா பலம் தாரும் , என் நாளைப் 
    பூவுலகில் கடத்த 
 
9. இந்த நாளிலுமே திருச்சபை வளர 
    ஏகா தயைகூரும் 
    தந்தையே , நானதற்  குதவியாயிருக்கத் 
   தற்பரா வரந் தாரும் 
 
 
 
 
 
 


   

Sunday, September 9, 2012

கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54

கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54
பல்லவி
கல்வாரி மலையோரம் வாரும் - உம்
பாவம் தீரும்.
அனுபல்லவி
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குராரே.
சரணங்கள்
1.லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய் திரண்டு,
   நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு,
   தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
   சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு ,
   சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா - ஜோதி

2. ஒண்முடி மன்னனுக்கு முன்முடியாச்சோ
    உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ ?
   விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ ?
   மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ?
   மேசையன் அப்பன் கோபம் மேலே இதற்குமேலே- ஜோதி

3.மலர்ந்த சுந்தர கண்கள் மயங்கலுமோ
  மதுரிக்கும் திருநாவு வரண்டதுமேனோ
  தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ ?
  தண்ணீரில்    நடந்த பாதம் சவண்டதுமேனோ?
 சண்டாளர்கள் நம்மால் தானே நம்மால் தானே  - ஜோதி 








இயேசுவை நாம் எங்கே காணலாம்?

பல்லவி
இயேசுவை நாம் எங்கே காணலாம்?
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் ?


அனுபல்லவி
பனிபடர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா ?
கனி நிறைந்த சோலை நடுவே காண முடியுமா?

சரணம்
ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அலைந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே - இயேசு

வானமதில் பவனிவரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியில் வீசும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம்  கூறிட மாட்டாயோ- இயேசு

கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என்முன்னே கர்த்தர் இயேசு நின்றார் -இயேசு 






நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

பல்லவி

நன்றியால்  நெஞ்சம் நிறைந்திடுதே
நன்மைகள் நாளும் நினைந்திடுதே
என்னருள் நாதர் அருட்கொடைகள்
எத்தனை ஆயிரம் என்றிடுதே ... ஆ ! ஆ !

சரணம்
1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்
  ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்
  சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள்
  தூயநல் தேன் மலர் தீங்கனிகள்.

2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்
 எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்
 துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்
துதித்திட சொல்லுடன் ராகங்கள்

3. உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர்
    உதவிகள் செய்திட பல்பணியர்
   அறவழி   காட்டிட அருள் பணியர்
  அன்புடன் ஏற்றிட ஆண்டவர்

4.உருவுடன் விளங்கிட ஒருடலம்
   உடலதில் இறைவனுக்கோர் இதயம்
  பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய
   திருமறை பேசிடும் வானுலகம்

                                                                       -  எஸ் .இஸ்ரவேல்
                                           
 

நல்லாவி ஊற்றும் தேவா

நல்லாவி ஊற்றும் தேவா

பல்லவி

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதி பாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தேகொஸ்தே நாளிலே
   உந்தனாவி ஈந்தீரே
   இந்த வேலையில் இறங்கிடுவீரே
  விந்தை செய் விண் ஆவியே

2.மெத்த அசுத்தன் நானே
   சுத்தாவி கொண்டென்னையே
   சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
 
3.ஆவியின் கனி ஒன்பதும்
   மேவி நான் தந்திடவும்
    ஜீவியமெல்லாம் புவி மீதிலே
    சுவிசேடப் பணியாற்றவும்

4.பாவம் செய்யாதிருக்க
   பாரில் சாட்சி பகர
   பார் மீட்க வந்த பரமனையே
   பாரோர்க்கு எடுத்துரைக்க 

 

Wednesday, June 15, 2011

உனக்கு நிகரானவர் யார் ? கீர்த்தனை 81

பல்லவி


உனக்கு நிகரானவர் யார் ? - இந்த


உலக முழுவதிலுமே .


அனுபல்லவி


தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே


மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு





சரணங்கள்


1.தாய் மகளுக்காக சாவாளோ - கூடப் பிறந்த


தமையன் தம்பிக்காய் மாய்வானோ?


நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை


நேர் விரோதிக்காய் ஈவானோ?


நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து


காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு .





2. கந்தை உரிந்தெறிந்தனை - நீதியின் ஆடை


கனக்க உடுத்துவித்தனை,


மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்


மாற்றி எந்தனைக் காத்தனை;


கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,


சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி - உனக்கு





Wednesday, June 8, 2011

இயேசு கலந்துகொண்ட கலியாணம்

கலியாணமாம் கலியாணம்
கானாவூரு கலியாணம்
கர்த்தன் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
கலியாணமாம் கலியாணம் ஆ-ஆ-ஆ-

1.விருந்தினர்கள் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே...
அறிந்த மரியாள் அவரிடம்
அறிவிக்கவே விரைந்தனள்

2.கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய் ....
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்

3. இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்

சமயமிது நல்லசமயம் ,உமதாவி கீர்த்தனை 97

பலலவி
சமயமிது நல்ல சமயம் , உமதாவி
தரவேனுமே

அனுபல்லவி
அமையுஞ் சத்துவங்குன்றி,
அருள் ஞானத் துயிரின்றி ,
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,-

சரணங்கள்
யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசு
வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி
மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம

ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட
உந்தையையினுற் சாகநல்லாவியை, - சம


ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்
ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்
போக்கியே செய்த ஆவியே இங்ங்னம், - சம

பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ் செய்த
விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள் முற்றும்
வேதனே உமதருளி னுயிர்பெறப்
பூதலர் உமைப் போற்ற நின் சேயராய்ப் , சம

உந்தன் ஆவியே , சுவாமி , என்றான் மீதினில் கீர்த்தனை 95

பல்லவி
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே , அருள் தந்து காவுமே .

சரணங்கள்
1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . - உந்தன்

2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . - உந்தன்

3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , - உந்தன்

4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்

5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்தன்

புண்ணியன் இவர் யாரோ கீர்த்தனை 45

பல்லவி
புண்ணியர் இவர் யாரோ ? - வீழ்ந்து ஜெபிக்கும்
புனிதர் சஞ்சலம் யாதோ ?

அனுபல்லவி
தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே ,
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் - புண்

சரணங்கள்
1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண
வேதனை யுற்றே னென்கிறார்

ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ;
நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,-

2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப்
பாடகலாதோ வென்கிறார் ;-

நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் ,- புண்
3. என் சித்த மல்ல வென்கிறார் ;- அப்பா நின்சித்தம்
என்றைக்குமாக வென்கிறார் ;
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்ப பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Saturday, May 22, 2010

வரவேணும் பரனாவியே கீர்த்தனை 101

பல்லவி
வரவேணும் பரனாவியே,
இலங்குஞ் சுடராய் மேவியே,

அனுபல்லவி
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர

சரணங்கள்
பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர

என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும் ,-வர

குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் கீர்த்தனை 184

பல்லவி

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

அனுபல்லவி
ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

சரணங்கள்
ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் -தேவ

Monday, May 10, 2010

தந்தானைத் துதிப்போமே கீர்த்தனை 237

பல்லவி

தந்தானைத் துதிப்போமே;- திருச்
சபையாரே, கவி- பாடிப்பாடி .

அனுபல்லவி
ஒய்யாரத்துச் சீயோனே, -நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பி துதி
செய்குவையே ,மகிழ் கொள்ளுவையே , நாமும் -தந்

கண்ணாரக் களித்தாயே ,-நனமிக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து ;
எண்ணுககடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமென்மேற் சோனா மாரிபோற பெய்துமே .- தந

சுத்தாங்கத்து நற்சபையே,-உனை
முற்றாய் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தை சிந்தி எடுத்தே உயிர் வரம் -தந

தூரம் திரிந்த சீயோனே ,-உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை- தந

Wednesday, April 28, 2010

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் கீர்த்தனை 6

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் ,
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் ,தோத்ரம் ,
ஏர்குணனே தோத்ரம்,அடியார்க் -கு
இறங்கிடுவாய் ,தோத்ரம்,மா தேவா

நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம் ,
நித்தமு முமக்கடியார்களின் தோத்ரம் ,
ஆர் மணனே,தோத்ரம் ,உனது
அன்பினுக்கே தோத்ரம் ,மா நேசா,

ஜீவன் சுகம் ,பெலன் ,யாவுக்கும் தோத்ரம்,
தினம், தினமஅருள் நன்மைக்கவும் தோத்ரம்,
ஆவலுடன் தோத்ரம் ,உனது
அன்பினுக்கே தோத்ரம், மா நேசா .

ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்,
அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம் ,
சாற்றுகிறோம் தோத்ரம்,உனது
தகுமன்புக்கே தோத்ரம், மாநேசா.

மாறாப் பூரண நேசா,தோத்ரம் ,
மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம் ,
தாராய் துணை தோத்ரம் ,இந்தத்
தருணமே கொடு தோத்ரம் , மாநேசா .

சாலேமின் ராசா, சங்கையின் ராசா, கீர்த்தனை 65

சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி வாருமேன்,
ஸ்வாமி, வாருமேன் ,-இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் ,- சாலே

சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே -இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித் திரிகின்ற செய்தி கேளீரோ? - சாலோ

எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப்
போகுதே ;--நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே-சாலே

நங்கை எருசலேம்பட்டினம் உமமைநாடித் தேடுதே ;-இந்த
நானிலத்திலுள்ள ஜீவபிராணிகள் தேடிவாடுதே - சாலே

சாட்சியாக சுபவிசேஷம் தாரணி மேவுதே ;உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிகூவுதே -சாலே

கிஞ்சிதமும் , நெஞ்சே , கீர்த்தனை 197

பல்லவி
கிஞ்சிதமும் , நெஞ்சே , அஞ்சிடாதே ;-நல்ல
கேடகத்தைப் பிடி நீ; -விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ .

அனுபல்லவி

வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெயகின்ற வேலையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ -கிஞ்சித

பாவத்தை வெறுக்க,ஆபத்தைச் சகிக்க ,
பத்தியில் தெளிக்கவும்,-நித்ய
ஜீவனைப் பிடிக்க ,லோகத்தை ஜெயிக்க ,
திறமை அளிக்கவும் ,
சாவே,உன் கூர் எங்கே? பாதாளமே ,உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும் ,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல ஆயுதம் .-கிஞ்சித

பண்டையர் அந்த பரிசையினால் அல்லோ ,
கண்டைந்தார் பேறு?-நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும்;தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது ,மாம்பல
காரியங்களையும் பார்;இது மா ஜெயம் .- கிஞ்சித

ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் ;அதின்
தோற்றமும் முடிவும் எசுபரன் செயல்
துணை அவர் பாதம் ;
ஏற்றர வணைக்கவே,பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே ,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து, நீ.- கிஞ்சித

கர்த்தரின் பந்தியில் வா கீர்த்தனை 255

பல்லவி
கர்த்தரின் பந்தியில் வா,- சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா .
அனுபல்லவி
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி -கர்த்தரின்

சரணங்கள்
ஜீவா அப்பம் அல்லோ? -கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? -உனக்காய்
பகிரப்பட்டதல்லோ?
தேவ குமாரனாம் ஜீவா அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றுன் பிழைத்திட -கர்த்தரின்

தேவ அன்பைப் பாரு ;கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு;
பாவக் கேட்டைக் கூறு ;-இராப்போசன
பந்திதனில் சேறு;
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அந்நியன் ஆகாதே .-கர்த்தரின்

அன்பின் விருந்தாமே;-கர்த்தருடன்
ஐக்யப் பந்தி யாமே;
துன்பம் துயர் போமே ;-இருதயம்
சுத்தத் திடனாமே ;
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போ வா- கர்த்தரின்

Monday, April 26, 2010

ஐயனே உமது திருவடி களுக்கே கீர்த்தனை 277

ஐயனே!உமது திருவடிகளுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம் !
மெய்யனே !உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம் ?

சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
சேர்த்தரவணைத்தீரே ;
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே

இருதயந் தனை நீ புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்

நாவிழி செவியை , நாதனே , இந்த
நாளெல்லாம் நீர் காரும் .
தீவினை விலகிநான் திருமுகம் நோக்க
தெய்வமே, அருள்கூரும் .

கைகாலால் நான் பவம் புரி யாமல்
சுத்தனே துணை நில்லும்
துய்யனே ,உம்மால் தான் எனதிதயம்
தூய்வழி செல்லும் .

ஊழியந் தனை நான் உண்மையாச் செய்ய
உதவி நீர் செய்வீரே .
ஏழை நான் உமக்கே இசையநல் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே.

அத்தனே! உமது மகிமையை நோக்க ,
அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும் ,மெய்விசுவாசம் ,
தேவனே உமக்கேற்க.

இன்றும் என்மீட்ப்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலமே தாரும்.என் நாளைப்
பூவுலகில் கடத்த .

இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்.
தந்தையே ,நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந்தாரும் .